திருச்சி மாவட்டம் சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாடு நேற்று (26-01-2024) நடைபெற்றது. இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் வேன் மற்றும் பேருந்தில் வருகை தந்தனர். அந்த வகையில், கடலூர் மாவட்டம் வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 25 பேர் மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்நிலையில், நேற்று இரவு மாநாட்டை முடித்துக்கொண்டு வேப்பூர் – விருதாச்சலம் வழியாக வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக வந்த லாரியும், வேனும் எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் உத்திரகுமார், யுவராஜ், அன்புச்செல்வன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 3 பேரின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.