திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத்தின் நிறுவனத்தலைவராகவும் இருப்பவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி. இவரது அலுவலகம் திருச்சி பாலக்கரை காவல் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ளது. இவரது அலுவலகம் அமைந்திருக்கும் பாலக்கரை ஆட்டுக்காரத்தெரு மிகவும் குறுகலான பகுதி என்பதால், அப்பகுதியில் வசிப்பவர்கள் தங்களது வாகனங்களை பாலக்கரை காவல் நிலையத்தை ஒட்டியுள்ள சாலையின் ஓரத்தில் நிறுத்திச்செல்வது வழக்கம். அதேபோல் வக்கீல் மகேஸ்வரி வையாபுரியும் கடந்த பிப்ரவரி 21ம் தேதி வழக்கம் போல் தனது ஸ்கூட்டியை சாலையை ஒட்டி நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலையில் நிறுத்திய இடத்தில் ஸ்கூட்டி இல்லாததைக் கண்டுஅதிர்ச்சியடைந்த அவர், அருகிலிருந்தவர்களிடம் விசாரித்துள்ளார்.
அப்போது பாலக்கரை காவல் உதவி ஆய்வாளர் ஆர்.வினோத் மற்றும் போலீசார் ஸ்கூட்டி லாக்கை உடைத்து காவல் நிலையத்துக்கு எடுத்துச்சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாலக்கரை போலீசாரிடம் கேட்டதற்கு, இரண்டு நாட்களுக்கும் மேலாக ஒரே இடத்தில் ஸ்கூட்டி நின்றதால் காவல் நிலையம் எடுத்துச்சென்றோம். வண்டியின் ஆர்.சி புக்கை காட்டி லெட்டர் எழுதி கொடுத்துவிட்டு ஸ்கூட்டியை எடுத்துச்செல்லுமாறு கூறியுள்ளனர். வக்கீல் மகேஸ்வரி வையாபுரியும் ஆர்.சி.புக்கை காட்டி லெட்டர் எழுதிக்கொடுத்துவிட்டு ஸ்கூட்டியை எடுத்துவர முயன்றுள்ளார். ஆனால், ஸ்கூட்டியை ஒரு இன்ச் கூட நகர்த்த முடியவில்லை. ஸ்கூட்டியின் பல இடங்களில் சேதம் அடைந்திருப்பதை கண்டார். இதனால் சந்தேகமடைந்த அவர், ஸ்கூட்டி நிறுத்தியிருந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்திருக்கிறார். அப்போது வண்டியின் சைடு லாக்கை உடைத்து எடுத்துச்சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி கூறும்போது., “என்னுடைய அலுவலகம் பாலக்கரை காவல் நிலையத்திற்கு எதிரே தான் உள்ளது. என்னைப்போல பலரும் இங்குதான் வழக்கமாக டூவீலர்களை நிறுத்துவோம். அப்படி இருக்கும்போது என்னுடைய வாகனத்தை மட்டும் அகற்றவேண்டிய காரணம் என்ன?. அதுவும் வாகனத்தின் சைடு லாக்கை உடைத்து முரட்டுத்தனமாக அகற்றவேண்டிய காரணம் என்ன?. ஒரு வழக்கறிஞருக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களின் நிலை என்ன?. இவரால் எப்படி பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கமுடியும். இது எதார்த்தமாக நடந்ததாக தெரியவில்லை. இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. திருச்சியின் பல இடங்களில் நடக்கும் ஆக்கிரமிப்புகள் குறித்தும் கோவில்ககளில் நடக்கும் முறைகேடுகள் குறித்தும் பொதுநல வழக்குகள் தொடுத்து ஆக்டிவாக இருந்துவரும் என்மேல் சப்- இன்ஸ்பெக்டர் வினோத்திற்கு என்ன கால்புணர்ச்சியோ தெரியவில்லை. இதுகுறித்து திருச்சி பார் கவுன்சில் மற்றும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புகார் கொடுக்க இருக்கிறேன். திருச்சி சிட்டி போலீஸ் கமிஷனர்தான் இதுகுறித்து விசாரித்து சப்- இன்ஸ்பெக்டர் வினோத்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதுதான் இனிமேல் இதுமாதிரியான நிகழ்வுகள் நடக்காது” என்றார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.