அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் கட்சிப் பணிகளில் தன்னை மீண்டும் ஈடுபடுத்திக் கொண்ட திருச்சி குடமுருட்டி சேகர்…!
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா கடந்த 2011ம் ஆண்டு திருச்சி ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டபோது அவருக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர்களில் முதல் மூன்று நபர்கள் 1) கே.என்.நேரு 2) கே.என்.ராமஜெயம் 3) குடமுருட்டி சேகர். இதன் காரணமாகவே அந்த தேர்தலில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஶ்ரீரங்கத்தில் ஜெயலலிதாவை எதிர்த்து வேலைசெய்த திமுகவினர் பல வழிகளில் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
அவர்களில் மிக கடுமையாக பாதிக்கப்பட்டவர் தான் குடமுருட்டி சேகர். இரண்டு முறை குண்டர் தடுப்பு சட்டம் பாய்ச்சப்பட்டு ஏராளமான நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். நீண்ட நெடிய சட்ட போராட்டம் நடத்தி வெளியே வந்த குடமுருட்டி சேகர், சிறைவாசம், அங்கு நடந்த கொடுமைகளை பற்றி துளிகூட அலட்டிக் கொள்ளாமல் ஆக்டிவ் அரசியலில் மாஸ் காட்டி வந்தார். கொஞ்சம்கூட பந்தா இல்லாமல் அனைவரிடமும் சகஜமாக பழகும் இயல்பு கொண்டவர் குடமுருட்டி சேகர். இதன் காரணமாகவே இவரை சுற்றி எப்போதும் பெரிய ஆதரவு வட்டம் இருக்கும். இது கட்சிக்கு அப்பாற்பட்டும் உண்டு. ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுகவின் துணைச்செயலாளர், உலக புகழ்பெற்ற ஶ்ரீரங்கம் கோவில் அறங்காவலர், கம்பரசம்பேட்டை ஊராட்சி மன்றத்தலைவர் என ஏகப்பட்ட பதவிகளை அலங்கரித்தவர் குடமுருட்டி சேகர்.
ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, பத்து ஆண்டுகளுக்கு பிறகு 2021ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தும், கட்சிப் பணிகளில் ஈடுபடாமல் கடந்த சில மாதங்களாக ஒதுங்கியே இருந்தார். இந்த நிலையில் அவர் இன்று (06-10-2024) சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து, தனது ஆதரவாளர்களுடன் டூ-வீலர், ஆட்டோ, கார் என ஏராளமான வாகனங்களில் அணிவகுத்து கரூர் பைபாஸ் ரோடு, கே.டி.சிக்னல் வழியாக தில்லைநகர் ஐந்தாவது கிராசில் உள்ள மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தை வந்தடைந்தார். பின்னர் அவர், திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவை சந்தித்து மாலை மற்றும் சால்வை அணிவித்து கட்சிப் பணிகளில் தன்னை மீண்டும் ஈடுபடுத்திக்கொண்டார்.
Comments are closed.