திருச்சி ரயில் நிலையம் அருகே உள்ள கல்லுக்குழியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் , நாளை 21-ந் தேதி( ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு மேல் 11-30 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.
இலக்குமி நாயகனாகவும், வைகுந்தவாசனாகவும் ஆதிமூலமாகவும் இருக்கின்ற எம்பெருமான் வைகுந்தத்தில் இருந்து பூலோகத்தில் உள்ள பக்த கோடிகளுக்கு எல்லா செல்வங்களையும் அருள்புரிய வேண்டுமென்று திருவுள்ளம் பற்றி ஆங்காங்கு வழிபடும் மூர்த்தியாய் பகவான் திருஅவதாரம் செய்தருளினார். இவற்றுள் கற்றோர் நிறைந்த நற்பதியாம், சோழவள நாட்டில் உள்ள திருச்சியில் கல்லுக்குழி என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் வழங்க நின்ற திருக்கோலத்தில் அருள் பாலித்து வரும் ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலில், பிள்ளையார், ஸ்கந்தன், நவக்கிரகம், ஆஞ்சநேயர் மூலவர், உற்சவர் . யோகநரசிம்மருடன் கூடிய ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மூலவர், உற்சவர், ஸ்ரீ பாண்டு ரங்கசுவாமி மூலவர், நூதனமாக பாண்டு ரங்கசுவாமி உற்சவமூர்த்தி, நூதனமாக பாதுகை (சடாரி) ராஜகோபுரம், கொடிமரம், பலிபீடம், யாகசாலை விமானம் மற்றும் உள்ள பரிவார மூர்த்திகளுக்கும், அனைத்து விமானங்களுக்கும் தை மாதம் 7-ஆம் நாள் (21-ந் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்குமேல் 11.30 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா நாட்களில் நாதஸ்வர கச்சேரியும், பக்தி மெல்லிசையும் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி, எம்.பி.க்கள் திருச்சி சிவா, சு.திருநாவுக்கரசர், திருச்சி தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் எம்.எஸ்.அன்பழகன், திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டத் தலைவர் த. துர்கா தேவி, மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஜெ.கலைச்செல்வி, திருச்சி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் இரா.பிரகாஷ், உதவி ஆணையர் ம.லட்சுமணன் மற்றும் பக்த பிரமுகர்கள், பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் மங்கள இசையுடன் காவிரி ஆற்றில் இருந்து யானை மூலம் புனிதநீர் எடுத்து வரப்பட்டது. அதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு முதல் கால யாக பூஜை மற்றும் புண்யாகவாஜனம், ரக்ஷாபந்தனம், வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம் போன்றவை நடந்தன. இன்று 20-ம் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜைகளும் மற்றும் பூஜைகளும் நடக்கின்றன. நாளை 21ம் தேதி காலை 7 மணிக்கு நான்காம் கால யாக பூஜை மற்றும் பூஜைகளும் காலை 10 மணி முதல் 11-30 மணிக்குள் விமானம் மற்றும் மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும், சாற்று முறைகள், தீர்த்த பிரசாதம் வழங்குதல், பஞ்ச தரிசனம் ஆகியவை நடக்கின்றன. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவிலின் தக்கார் தி.சுந்தரி, செயல் அலுவலர் பா.சுதாகர் மற்றும் கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.