திருச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டம் தேவை இல்லை காங்.எம்பி கார்த்தி சிதம்பரம்: கண்டிப்பாக தேவை திமுக எம்பி அருண் நேரு…!
திருச்சிக்கு மெட்ரோ திட்டம் குறித்து திமுக எம்.பி. அருண் நேருவுக்கும், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கும் இடையே சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் கருத்து மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில், “திருச்சிக்கு மெட்ரோ ரயில் சேவை தேவையில்லை. சிந்திக்கப்படாத இந்த மாதிரியான திட்டங்களுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அடிப்படைத் தேவைகளில் கவனம் செலுத்துங்கள்” என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, பெரம்பலூர் திமுக எம்.பி. அருண் வெளியிட்ட பதிவில், “கிராமப்புறங்களை திருச்சி நகரத்துடன் இணைக்கும் மெட்ரோ திட்டங்களின் தேவையை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். நகரத்தில்தான் கல்லூரிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் போன்றவை உள்ளன.
நகரம் வேகமாக வளர்ந்து வருவதையும், சாலைகள் கையாள முடியாத, பெருகக்கூடிய மக்கள்தொகை வளர்ச்சியையும் நிர்வகிக்க மெட்ரோ தேவை என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார். தொடர்ந்து கேள்வியெழுப்பிய கார்த்தி சிதம்பரம் “மக்கள் தொகை வளர்ச்சி கணிப்புகளை கணக்கில் எடுத்துக் கொண்டாலும், திருச்சி போன்ற சிறிய நகரங்களுக்கு மெட்ரோ போக்குவரத்து அர்த்தமுள்ளது
தானா? இதற்கு பதிலாக, பிற பொதுப் போக்குவரத்து தீர்வுகள் ஏதேனும் உள்ளதா? மெட்ரோ மட்டுமே வழி அல்ல” என்று தெரிவித்தார். இதனையடுத்து, அருண் நேரு “வழக்கமான ரயில்களும், பேருந்துகளும் கூடுதல் நேரங்களில் இயக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், மக்களை ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு நகர்த்துவதற்குதான் மெட்ரோ வேலை செய்கிறது. கடந்த பல ஆண்டுகளாக நமது நகரங்கள் செங்குத்தான வளர்ச்சியைக் கொண்டிருக்கிறது. மெட்ரோ பெரும்பாலும் தரைக்குக் கீழே அல்லது அதற்கு மேல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் எந்த பிரச்சனையும் இல்லாமல் கிடைக்கும் மூன்றாவது பரிமாணத்தைப் பயன்படுத்துகிறது” என்று கூறியுள்ளார். இதனையடுத்து, கார்த்தி சிதம்பரம், 27 லட்சம் மக்கள்தொகை கொண்ட திருச்சி மட்டும் எப்படி மெட்ரோவை தக்கவைக்கும்? திருச்சிக்கு அதுதவிர மற்ற அவசரத் தேவைகள் உள்ளன. அவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று நம்புகிறேன்” என்று கூறினார். அவருக்கு பதிலளித்த அருண் நேரு “நாம் செலவு விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தினால், பலன் கிடைக்காது. மெட்ரோவின் மூலம் ஏற்படவிருக்கும் வணிகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி, பயணத்தின் எளிமை, மக்கள் பரிமாற்றம், ஒட்டுமொத்த சமூக பொருளாதார வளர்ச்சியைதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். சென்னையில் மெட்ரோ இல்லையெனில், சென்னையின் சாலைகள் அடைக்கப்பட்டிருக்கும்” என்று கூறினார். ஒரே கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்.பி யும், திமுக எம்.பி. யும்
வார்த்தைகளால் மோதி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.