Rock Fort Times
Online News

காவல்துறையில் உள்ள மோப்ப நாய்களுக்கான போட்டிகளில் முதல் பரிசு பெற்ற திருச்சி ” பாண்ட்-3 ‘…!

காவல்துறையில் கொலை, கொள்ளை, வெடிகுண்டு கண்டறிதல், போதை பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் துப்பு துலக்கவும், குற்றவாளிகளை கண்டறியவும் மோப்பநாய் பேருதவியாக உள்ளது. மேலும், விபத்துகள், மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர் பாதிப்புகளில் மீட்புப்பணியிலும் போலீசாருக்கு உதவிகரமாக இருக்கின்றன. இவற்றுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஜெர்மன் ஷெப்பர்டு, டாபர்மேன், லாப்ரடார் மற்றும் ராட்வீலர் உள்ளிட்ட வகைகளைச் சேர்ந்த நாய்கள்தான் காவல்துறையில் பெருமளவில் சேர்க்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் தரம், பாரம்பரியம், உடலமைப்பு, ஆரோக்கியம் அடிப்படையில் பிறந்து 45 நாட்களுக்குள் காவல்துறையில் சேர்க்கப்படுகின்றன. தொடர்ந்து அவற்றுக்கு ஒரு வயது வரை போலீசார் சிறப்பு பயிற்சி அளிக்கின்றனர். பின்னர், மோப்ப நாய்ப்படையில் சேர்க்கப்படுகின்றன. காவல்துறையில், தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருவோருக்கு ஆண்டுதோறும் மாநில அளவில் திறனறியும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டிகளில் மோப்ப நாய்களுக்கென தனி போட்டிகளும் உண்டு. இதில், தனித்தனியான திறனறியும் போட்டிகளும் நடத்தப்படும். இது தொடர்பான போட்டிகள் ( “போலீஸ் மீட்2024′) சென்னையில் அண்மையில் நடந்தது. இதில், மாநிலம் முழுவதிலும் இருந்து காவல் துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் மோப்ப நாய்கள் கலந்து கொண்டன. கட்டளைக்கு கீழ்படிதல், கட்டளையை நிறைவேற்றுதல், ஒழுக்கம் ஆகியவற்றுடன், தனித்திறனறியும போட்டிகளும் நடைபெற்றன. இதில், போதை பொருள் தடுப்பு பிரிவில் பணியாற்றி வரும் நாய்களுக்கு இடையிலான போட்டிகளில், திருச்சி மாவட்ட காவல்துறையில், போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வரும் “பாண்ட்’ -3 என்ற லாப்ரடார் வகையைச் சேர்ந்த நாய் முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்று திருச்சி மாவட்ட காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்