திருச்சி எ.புதூர் குட்டிமலை கல்குவாரியில் அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதா? வழக்கறிஞர் குழு நேரில் ஆய்வு…!
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அருகே குட்டிமலையில் உள்ள கல்குவாரியில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக கற்கள் வெட்டி எடுத்துச் செல்லப்படுவதால் இந்த குவாரியை மூட உத்தரவிட வேண்டும் என அருகில் உள்ள குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செண்பகவல்லி என்பவர் பொதுமக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், குட்டிமலை கல்குவாரியில், சுமார் 200 அடி ஆழத்துக்கும் அதிகமான கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. குவாரிக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்க தனியாருக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. அங்கு பாறைகளை உடைக்க வெடி வைக்கும் போது, அருகே உள்ள குடியிருப்புகளில் சிதறும் கற்கள் விழுந்து வீடுகள் சேதமடைகிறது. எனவே, தனியாருக்கு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது குவாரியை எடுத்து நடத்துபவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசு விதிகளுக்கு உட்பட்டுதான் கல்குவாரி நடத்தப்படுகிறது எனக் குறிப்பிட்டார். இதையடுத்து நீதிபதிகள் சம்பந்தப்பட்ட கல்குவாரி விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் செயல்படுகிறதா? அல்லது விதிமீறல்கள் உள்ளதா ? என வழக்கறிஞர் ஆணையர் தலைமையிலான குழு, குவாரியை ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர். அதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலிருந்து வழக்கறிஞர் ஆணையர் லாவண்யா தலைமையில் திருச்சி கனிமவளத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர், குட்டிமலை கல்குவாரியில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், திருச்சி பொன்மலை கோட்ட தலைமை நில அளவையர் கதிர்வேல், நில அளவையர் முருகன், கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ்வரன், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரி தேன்மொழி, உதவி இயக்குனர் ஆறுமுகம், எடமலைப்பட்டிபுதூர் போலீசார் உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றிருந்தனர். அப்போது, குடியிருப்பு வாசிகள் ஆய்வுக்குழுவினரிடம் கூறுகையில், குட்டிமலை குவாரியில் பாறைகளை வெடி வைத்து தகர்ப்பதால் வீடுகளில் பாறை கற்கள் விழுவதால் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறோம். குடிநீர், உணவு பொருள்களில் கிரசர் பவுடர் விழுகிறது. எனவே, குட்டிமலை குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனக்குறிப்பிட்டு, அவற்றை மனுவாக எழுதி ஆய்வுக்குழுவிடம் வழங்கினர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.