முசிறி கோர விபத்து: பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்தார்… தமிழக முதல்வரின் நிவாரண நிதி அறிவிப்பு எப்போது?* பலியானவர்களின் குடும்பங்கள் எதிர்பார்ப்பு..!
திருச்சி மாவட்டம், முசிறி, ஜம்புநாதபுரம் அருகே நேற்று(22-11-2026) சாலை விபத்து நடைபெற்றது. இதில் நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி வேனில் வந்த 10 நபர்களில் 8 பேர் பலியாகினர். மீதமுள்ள இரண்டு பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செங்கல் சூளையில் வேலை பார்த்த மிகவும் ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த இவர்கள், சுப நிகழ்வு ஒன்றில் பங்கேற்று விட்டு திரும்பும்போது இந்த கோர விபத்து நடைபெற்றுள்ளது. வழக்கமாக இது போன்ற சாலை விபத்துகள் நடைபெறும் போது முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி வழங்கி அறிவிப்பது வழக்கம். ஆனால், தற்போது வரை முசிறியில் ஏற்பட்டுள்ள சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கோ அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கோ எந்தவிதமான நிதி உதவியும் தமிழக முதல்வரிடமிருந்து வரவில்லை. ஆனால், இந்திய பிரதமர் மோடி முசிறி விபத்தில் சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரண்டு லட்சம் ரூபாயும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மத்திய அரசின் கவனத்திற்கு சென்ற முசிறி சாலை விபத்து நிதியுதவி, ஏனோ தமிழக முதல்வரின் கவனத்திற்கு இன்னும் செல்லவில்லை. வெறும் இரங்கல் அறிவிப்பு வெளியிட்டதோடு முதல்வர் நிறுத்திக் கொண்டார். ஆகவே, பொது நிவாரண நிதி சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, முசிறி சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் நிதி வழங்கி உதவ வேண்டும் என சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களும், ஊர் பொதுமக்களும் கண்ணீர் மல்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.