திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிபுரத்தை சேர்ந்தவர் பால் பேட்ரிக் வயது (42). இவர் காட்டூர் புகழ் நகர் பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் கடந்த 6 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல, பால் பேட்ரிக் இன்று(25-04-2024) பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவர் லேத் மெஷினை சக தொழிலாளர்களுடன் சேர்ந்து நகர்த்திய போது எதிர்பாராத விதமாக அந்த எந்திரம் பால் பேட்ரிக் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது அண்ணன் வில்லியம் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பால் பேட்ரிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்புதான் சத்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து உள்ளது. இவர்களுக்கு குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு இன்று பிறந்தநாள் ஆகும் இதற்கான பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் செய்து வந்த நிலையில் பால் பேட்ரிக் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.