திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கே.ஆர்.எஸ்.நகர் விரிவாக்கப் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் மனோஜ்குமார்(வயது 30). இவருடைய மனைவி ஷோபனா(26). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. தக்ஷிவன்(3), கபிக்ஷன்(11மாதம்) என்ற 2 மகன்கள் உள்ளனா். மனோஜ்குமார் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் சொந்தமாக பர்னிச்சர் கடை நடத்தி வந்தார். இவருக்கு பெற்றோர் இல்லை. அவருடைய தாய் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்துவிட்டார். அவருடைய உறவினர்கள் தான், ஷோபனாவை பெண் பார்த்து மனோஜ்குமாருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கொரோனா ஊரடங்கு காரணமாக பர்னிச்சர் கடையில் நஷ்டம் ஏற்படவே அவர் தொழிலை விட்டுவிட்டு ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்துக்கு வேலைக்கு சென்று வருகிறார். தொழில் நஷ்டம் காரணமாக மனோஜ்குமார் மன தளவில் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. உறவினர் வீட்டு விஷேசங்களுக்கு செல்லும் போது, மனோஜ்குமாரை சிகிச்சை அழைத்து செல்லலாம் அல்லவா? என்று ஷோபனாவிடம் உறவினர்கள் கேட்டுள்ளனர். இதனால், அவர்களின் குடும்பத்தில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மனோஜ்குமார் வெளியூர் சென்றிருந்தார். நேற்று காலை ஷோபனா தனது இளைய மகனை தூக்கிக்கொண்டு மனோஜ்குமாரின் உறவினர் வீட்டுக்கு சென்று, இப்படி மனநிலை பாதிக்கப்பட்டவரை எனக்கு திருமணம் செய்து வைத்துவிட்டீர்களே என்று அழுது புலம்பியதாக தெரிகிறது.
இந்தநிலையில் மன அழுத்தத்தில் இருந்த ஷோபனா வாழ்க்கையில் விரக்தி அடைந்து நேற்று பகலில் தனது 2 குழந்தைகளையும் துப்பட்டாவால் தூக்கில் தொங்கவிட்டு கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதியம் ஊருக்கு திரும்பிய மனோஜ்குமார் வீட்டுக்கு வந்த போது வீட்டின் கதவு உட்புறமாக பூட்டி இருந்தது. இவர் கதவை பல முறை தட்டியும் ஷோபனா கதவை திறக்கவில்லை. செல்போனும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மனேஜ்குமார், வீட்டின் பின்புறம் பால்கனி வழியாக ஏறி கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது மனைவி, குழந்தைகள் 3 பேரும் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்த தகவலின் பேரில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் அன்பு, உதவி போலீஸ் கமிஷனர் கென்னடி, போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபிஉமா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஷோபனாவுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் திருச்சி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார். குடும்ப பிரச்சினையில் 2 குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.