Rock Fort Times
Online News

இந்திய கம்யூனிஸ்டு கட்சி திருப்பூர் எம்.பி. சுப்பராயனின் மகன் தி.மு.க.வில் இணைந்தார்…!

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் எம்.பி. சுப்பராயனின் மகன் பாரதி சுப்பராயன். திருப்பூர் நவீன மனிதர்கள் அமைப்பின் தலைவரான பாரதி சுப்பராயன் இன்று(08-10-2026) அண்ணா அறிவாலயம் சென்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவரை மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது நவீன மனிதர்கள் அமைப்பின் நிர்வாகிகளும் தங்களை திமுகவில்
இணைத்து கொண்டனர். அப்போது திமுக பொருளாளர் டி. ஆர்.பாலு எம்.பி, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம். பி, திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் தினேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். திமுகவில் இணைந்த பிறகு பாரதி சுப்பராயன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

மாநில உரிமைக்காக போராடும் இயக்கம் திமுக. ஆனால் அரசியல் அனுபவமே இல்லாத ஒரு நடிகர் இன்று முதல்வராகி இருக்கிறார். அவருக்கு கட்-அவுட், போஸ்டர் ஒட்டி கொண்டு இருந்தவர்கள் இன்று அமைச்சர்களாக, சட்டமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள். இன்றைய சூழலில் அரசியல் தரம் மிகவும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அவர்களால் சரியான நிர்வாகத்தை வழங்க முடிவதில்லை. வெறும் பஞ்ச் டயலாக் பேசுவதுதான் நடக்கிறது. சரிந்து வரும் அரசியல் தரத்தை உயர்த்த வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு மட்டுமே உள்ளது. அதனால்தான் ‘நவீன மனிதர்கள்’ அமைப்பிலிருந்து விலகி திமுகவில் இணைகிறோம். ஆதிக்கம், சாதி ஆதிக்கம், மொழி ஆதிக்கம் மற்றும் மாநில உரிமைகள் மறுக்கப்படும் சூழலில், சரியான கொள்கைகளை வகுத்துச் செயல்படும் திமுகவின் கொள்கைகளோடு நாங்கள் ஒத்துப்போவதால் மக்களிடம் இக்கொள்கைகளைக் கொண்டு சேர்க்க திமுகவில் இணைந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்