தவெக ஆட்சி மீது எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை: ‘தமிழைப் போல உண்மையான தலைவன் முதல்வர் விஜய்’ என நாஞ்சில் சம்பத் புகழாரம்..!
தமிழக அரசியல் களத்தில் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் நாஞ்சில் சம்பத். தொடக்கக் காலத்தில் திமுகவில் இருந்த அவர் பின்னாளில் திமுகவில் இருந்து விலகி மதிமுக வில் இணைந்தார். பின்னர், அதிமுகவில் இணைந்தார். அங்கிருந்தும் விலகி விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அதனையடுத்து அவருக்கு அக்கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சமீபத்தில் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அவர் தமிழக வெற்றி கழகத்திற்காக தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். தவெக சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு வந்த நாஞ்சில் சம்பத்திற்கு, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு தவெக சார்பில் அழைப்பு விடுவிக்கப்படவில்லை. இத்தகைய சூழலில், நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், “போனால் போகட்டும் போடா.. இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா.. என்னுடைய பகலை எவரும் இருட்டாக்க முடியாது.. என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது. என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடியாது எனத் தெரிவித்திருந்தார். தவெக மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக இந்த பதிவை அவர் வெளிப்படுத்தி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதினர்.
இதனை மறுத்த நாஞ்சில் சம்பத் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உப்பைப் போல எளிமையானத் தலைவன், தென்றலைப் போல மென்மையான தலைவன், தமிழைப் போல உண்மையான தலைவன் தளபதி (முதல்வர் விஜய்) இளைஞர்களின் இதயத்திலும், பெண்களின் பேராதரவிலும் எந்நாளும் வலுவாக திகழ்கின்ற மனசாட்சி உள்ள மக்களாட்சியின் தலைமகன். முதல்வர் விஜய்யின் தவெக ஆட்சி குறித்து நான் விமர்சனம் செய்ததாக இட்டுக்கட்டிய பொய்களை சிலர் பரப்பி வருகிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. இந்த ஆட்சியின் மாட்சி குறித்து நான் தினமும் பதிவிட்டு வருகிறேன். இதை என் தலைமையும் அறியும்; என் மனமும் அறியும்..!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.