Rock Fort Times
Online News

தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் உள்ளாட்சித் தேர்தல்… * சிறப்பு அலுவலர்களின் பதவி காலம் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு…!

தமிழ்நாட்டில் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வெளியிட்ட அரசாணையில், ”தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஏற்கெனவே முடிவடைந்துள்ளது. இதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்ட நிலையில், அவர்களின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது அவர்களின் பதவிக்காலம் அக்டோபர் 19ம் தேதியுடன் முடிவடைந்தது. மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலமும் 2026 அக்டோபர் 19ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால், மொத்தம் 37 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், தமிழ்நாட்டில் 46 ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாற்றங்களால் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் எல்லைகளிலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல், புதிதாக 9 ஊராட்சி ஒன்றியங்களும் 93 கிராம ஊராட்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட பகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்ய வேண்டும். அதன்பின்னர், ஊராட்சிகளில் எத்தனை வார்டுகள் இருக்க வேண்டும் என்பதை இறுதி செய்வதுடன், பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டையும் முடிவு செய்ய வேண்டும். இந்தப் பணிகள் முடிவடையாததால், உடனடியாக ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத நிலை இருக்கிறது. இதையடுத்து, தேர்தல் நடத்துவதற்கான பணிகள் நிறைவடையும் வரை உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் பாதிக்கப்படாமல் இருக்க சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் கூடுதலாக 6 மாதங்கள் நீட்டிக்கப்படுகிறது. அதனுடன், 19ம் தேதியுடன் பதவிக்காலம் முடிவடையும் 9 மாவட்டங்களுக்கும் புதிதாக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, 2026 அக்டோபர் 20ம் தேதி முதல் 2027 ஏப்ரல் 19ம் தேதி வரை சிறப்பு அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகப் பொறுப்புகளை மேற்கொள்வார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்