புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் திருமாவளவன்…* பரபரப்பு அறிக்கை!
30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் என். ஆர்.காங்கிரஸ், பாரதிய ஜனதா, அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி ஒரு அணியாகவும், காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றொரு அணியாகவும் களம் காண்கின்றன. இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று( மார்ச் 26) புதுச்சேரி தொகுதியில் தங்களது கட்சி சார்பில் 3 வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அதன்படி ஊசுடு தொகுதியில் பெ. அரியபுத்ரி என்கிற அரிமாத்தமிழன், நெட்டப்பாக்கம் தொகுதியில் ப. அமுதவன், உழவர்கரை தொகுதியில் செல்வ.புஷ்பலதா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திமுகவுக்கென ஒதுக்கப்பட்ட 14 தொகுதிகளிலிருந்து ‘உழவர்கரை தொகுதியை’ திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கியது. அந்தத் தொகுதியில் ஆர்.எஸ்.எஸ், பாஜகவைச் சார்ந்தவரும், பாஜகவிலிருந்து விலகி ஓரிரு வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவருமான ஒருவரைத் தற்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அந்தத் தொகுதி விசிகவுக்கென ஒதுக்கப்பட்ட பிறகும்கூட அவரை வாபஸ் பெற வைக்காமல் புதுச்சேரி காங்கிரஸ் மறுக்கிறது. இதனால், காங்கிரஸ் கூட்டணியில் விசிகவுக்கு தொகுதி உண்டா, இல்லையா? என்பது தெளிவாகாத நிலை ஏற்பட்டிருக்கிறது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு இன்று பிற்பகல் 3 மணியோடு முடிவடைய உள்ளது. இந்நிலையில் காங்கிரஸின் அணுகுமுறை விசிகவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தமாகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பையே கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கிறது. எனவே, வேறு வழியின்றி விசிக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள 3 தொகுதிகளுக்குமான அதிகாரப்பூர்வமான வேட்பாளர்களை அறிவிக்கிறோம். கடந்த 5 ஆண்டுகளாக புதுச்சேரியை சீரழித்துவரும் பாஜக கூட்டணியை வீழ்த்தி மீண்டும் சமூக நல்லிணக்கமும், வளர்ச்சியில் அக்கறையும் கொண்ட ஆட்சியைப் புதுச்சேரியில் அமைத்திட மதச்சார்பற்ற உணர்வுகொண்ட புதுச்சேரி மக்கள் விசிக வேட்பாளர்களுக்குப் பேராதரவு அளித்து வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.