திருச்சியில் ஓடும் பஸ்சில் அரசு ஊழியரிடம் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய வாலிபரை விரட்டி பிடித்த பொதுமக்கள்…!
சிவகாசியை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் தேர்வு எழுதுவதற்காக இன்று(25-08-2024) திருச்சி வந்தார். பின்னர் அவர், தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியில் நடைபெற்ற தேர்வுக்கு செல்வதற்காக மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்தில் பயணம் செய்துள்ளார். திருச்சி தலைமை தபால் நிலையம் போக்குவரத்து சிக்னலில் அந்த பேருந்து நின்ற போது அரசு ஊழியரிடம் செல்போனை பறித்துக் கொண்டு வாலிபர் ஒருவர் கீழே குதித்து தப்பி ஓடினார். அரசு ஊழியர் திருடன்…திருடன்… என்று கூச்சலிட்டார். உடனே, பஸ்ஸில் இருந்த சில இளைஞர்கள் கீழே குதித்து செல்போன் திருடனை விரட்டி சென்றனர். அப்போது அந்த திருடன் தலைமை தபால் நிலைய வளாகத்திற்குள் நுழைய முயன்றான். ஆனால், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தபால் நிலையத்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. இதனால், அந்த திருடன் எங்கும் செல்ல முடியாமல் பொதுமக்களிடம் வசமாக சிக்கிக் கொண்டான். பின்னர் அந்த திருடனை கண்டோன்மென்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவனிடம் போலீசார் விசாரணை நடத்திய போது 3 பேர் சேர்ந்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும், இதே போல மத்திய பஸ் நிலையத்தில் வட மாநில தொழிலாளி ஒருவரிடம் செல்போன் பறித்ததும் தெரிய வந்தது. அதன்பேரில் அவனை போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்து திருடப்பட்ட 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவனது கூட்டாளி 2 பேரை தேடி வருகின்றனர்.

Comments are closed.