Rock Fort Times
Online News

மக்கள் விரோத திமுக அரசால் முடக்கி வைக்கப்பட்ட “நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை” மீண்டும் செயல்படுத்த வேண்டும்… * தவெக அரசுக்கு இபிஎஸ் கோரிக்கை!

தவெக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக காவேரிப் படுகைகள் வளம் பெறவும், மக்கள் நலன் பெறவும், எனது தலைமையிலான ஜெயலலிதாவின் அரசு 2019-ம் ஆண்டு தமிழகத்தில் காவேரி ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளைப் புத்துயிர் பெறச் செய்தல், மேம்படுத்துதல் மற்றும் மாசுபடுவதில் இருந்து முழுமையாக மீட்டெடுத்தல் ஆகியவற்றை முக்கிய நோக்கங்களாகக்கொண்டு, ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற ஒரு உன்னதத் திட்டத்தை முன்னெடுத்தோம். இதற்காக ரூ.11,250 கோடி மதிப்பீட்டில் முதல்நிலை திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பிரதமரிடம் நானே நேரில் வழங்கி இத்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தினேன். கொள்கை அளவில் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையிலேயே இந்தத் திட்டம் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 2021-ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையிலும், இத்திட்டத்தின் முதற்கட்டப் பணிகளுக்காக மத்திய அரசு (2024-ம் ஆண்டு) சுமார் ரூ.935 கோடிக்கு ஒப்புதல் அளித்தது. இதனை மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் செலவிட ஒப்புக் கொள்ளப்பட்டது. கடந்தகால திமுக அரசு 2024 முதல் ஆட்சியை விட்டு இறங்கும் வரை இத்திட்டத்திற்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. இதனால் திட்டம் துவக்கப்படவேயில்லை. ஐந்தே ஆண்டில் 5 லட்சம் கோடி ரூபாயை கடனாகப் பெற்று வீண் விரயம் செய்த திமுக அரசு, இந்தத் திட்டத்திற்கான நிதியை ஒதுக்காமல், மத்திய அரசின் பங்கையும் பெறாமல் உன்னதான ஒரு திட்டத்தைக் கிடப்பில் போட்டது. ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்ற சித்தாந்தத்தை நாவளவில் சொல்லி, தங்களை தூய சக்தி என்று அழைத்துக்கொண்டு, தமிழகத்தில் மாற்றம் கொண்டுவருவோம் என்ற முழக்கத்துடன் ஆட்சியில் அமர்ந்துள்ள த.வெ.க. அரசு, தமிழக மக்களுக்காகவும், தமிழக விவசாயப் பெருங்குடி மக்களுக்காவும், புதிதாக எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் விரோத திமுக அரசால் முடக்கி வைக்கப்பட்ட ‘நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை’ மத்திய அரசின் துணையோடு உடனடியாகத் துவக்கி பணிகளை முன்னெடுக்க வேண்டும். வாய்ச் சவடால் அடிப்பது, ரீல்ஸ் விடுவது, குதிரை பேரம் நடத்தி ஆட்சியைக் காப்பாற்ற முயல்வது போன்ற தகிடுதத்த வேலைகளையெல்லாம் கைவிட்டுவிட்டு, விவசாயப் பெருமக்களுக்கு, குடிநீர்த் தேவைகளை பூர்த்தி செய்யும் ‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டத்தை செயல்படுத்துமாறு த.வெ.க. அரசின் ‘கனவுலக முதலமைச்சரை’ வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்