ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் வைபவம்… இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது! (வீடியோ இணைப்பு)
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அந்தவகையில் இந்த ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 9ம் தேதி முதல் 30ம் தேதி வரை சிறப்பாக நடைபெற உள்ளது. முன்னதாக விழாவிற்கான
முகூர்த்தக்கால் நடும் வைபவம் இன்று(23-10-2026) நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் வழிகாட்டுதலின் படி ஆயிரங்கால் மண்டபத்தில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் முகூர்த்தக்காலுக்கு சந்தனம் பூசி பூஜை செய்யப்பட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது.
இதில், கோவில் நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். டிசம்பர் 9ம் தேதி இரவு 7 மணிக்கு திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்குகிறது, டிசம்பர் 10ம் தேதி பகல்பத்து விழா தொடங்குகிறது. பகல்பத்து விழாவின் பத்தாம் திருநாளான மோகினி அலங்காரம் டிசம்பர் 19ம் தேதியும், இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான வைகுண்ட ஏகாதசி எனப்படும் பரமபத வாசல் திறப்பு டிசம்பர் 20 ம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 26ம் தேதி மாலை 6 மணி முதல் 6-15 வரை திருக் கைத்தல சேவையும், 27ம் தேதி மாலை 5 மணி அளவில் திருமங்கை மன்னன் வேடுபறி புறப்பாடும், 29ம் தேதி காலை 10-30 மணி அளவில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறநிலையத்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.

Comments are closed.