Rock Fort Times
Online News

மண்ணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவன் பரிசளித்த ரூ.40 கோடி ஹெலிகாப்டர்- * உண்மையா? உருட்டா?

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருப்பவர் சீ.கதிரவன். பெரம்பலூரை தலமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் தனலட்சுமி சீனிவாசன் தொழிற் குழுமத்தின் தலைவரான அ.சீனிவாசனின் மகனான இவர், கடந்த அக்டோபர் 12ம் தேதி பிறந்தநாள் கொண்டாடினார். இதற்கு முன்பாக, கடந்த அக்டோபர் 7ம் தேதி இவரது தந்தையான சீனிவாசனின் பிறந்தநாள். இதையொட்டி, தனது தந்தையும், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தருமான சீனிவாசனுக்கு வித்தியாசமாக புதுவித பரிசளிக்க விரும்பிய கதிரவன், ரூ.40 கோடி மதிப்பிலான ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கி அவருக்கு பரிசளித்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வைரலானது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், கதிரவனுக்கு எதிராக பல்வேறு எதிர்மறை கமெண்டுகளை டைப் செய்து குவித்தனர். அதில், மண்ணச்சநல்லூர் தொகுதி மக்கள் அடிப்படை பிரச்சனைகளுக்காக போராடும்போது உங்களுக்கு இந்த ஆடம்பரம் தேவையா?, தொகுதியில் எத்தனையோ அடிப்படை பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. கடைக்கோடி கிராமங்களுக்கு இன்னும் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சாரம், பேருந்து வசதி போன்ற அடிப்படைகளே எட்டா கனவாக இருக்கும்போது நீங்கள் மட்டும் இப்படி விதவிதமாக ஆடம்பர சொகுசு வாழ்க்கை வாழ்ந்து அதை வீடியோ வெளியிட்டு மகிழ்கிறீர்கள்?, காசு பணம் தேவையில்லை. நான் எப்போதும் மக்களோடு மக்களாக இருப்பேன் எனக் கூறி வாக்கு சேகரித்த எம்எல்ஏ கதிரவன், தற்போது தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார். எந்த , தொகுதி பிரச்சனைக்கும் தலைகாட்டுவதில்லை. தொகுதிக்குள் நடக்கும் கல்யாணம், காதுக்குத்து போன்ற விஷேசங்களில் மட்டுமே தலைகாட்டிவிட்டு சென்று விடுகிறார். அப்போதுமே அவரை நேரடியாக மக்கள் எளிதில் சந்திக்க முடிவதில்லை. காரணம், அவரைச் சுற்றி எப்போதுமே ஒரு சிலர் சூழ்ந்து கொண்டு மக்களை நேரடியாக சந்திக்க விடாமல் தடுத்து விடுகின்றனர் என்பது போன்ற எதிர்மறை கமெண்டுகளை பதிவிட்டனர்.

இந்நிலையில், கதிரவன் தனது தந்தைக்கு பரிசளித்ததாக கூறப்படும் ரூ.40 கோடி மதிப்பிலான ஹெலிகாப்டர் உண்மையிலேயே அவரால் வாங்கப்பட்டதா? என்பது குறித்து எம்எல்ஏ தரப்பிடம் நாம் விசாரித்தோம். அப்போது அவர்கள் கூறியதாவது., எம்எல்ஏ கதிரவன், தனது தந்தையின் பிறந்தநாளுக்கு அவருக்கு ஏதாவது வித்தியாசமாக பரிசளிக்க ஆசைப்பட்டார். எனவே, ஹெலிகாப்டர் ஒன்றை ரூ.7 லட்சம் கொடுத்து ஒரு நாள் வாடகைக்கு எடுத்தோம். அதில்தான் அவர்களுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்துவிட்டு வந்தனர். மற்றபடி சொந்தமாக ஹெலிகாப்டர் எதுவும் வாங்கவில்லை. அதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தியும், வீடியோவும் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்