Rock Fort Times
Online News

மகளிர் ‘வெற்றி பயணம்’ திட்டத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு: வழக்கு தள்ளுபடி…!

கடந்த திமுக ஆட்சியில் வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள், வயதானவர்கள் உள்ளிட்டோர் பயன் பெறும் வகையில் செயல்படுத்தி வந்த விடியல் பயண திட்டம் விரிவுபடுத்தப்பட்டு ‘வெற்றி பயண திட்டம்’ என்ற பெயரில் அக்டோபர் 2-ம் தேதி தமிழக முதல்வர் விஜய் துவக்கி வைத்தார். இந்நிலையில், தவெக தலைமையில் ஆட்சி அமைந்த பின், தமிழகம் முழுவதும் இயங்கும் 12 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய வகை செய்யும், நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள வெற்றி பயண திட்டத்தை எதிர்த்து ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் கலாமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், “வெற்றி பயண திட்டம் காரணமாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் வருவாய் இழப்பை சந்தித்து, தொழிலை கைவிட வேண்டிய சூழல்
உருவாகியுள்ளது. வெற்றி பயண திட்ட பயனாளிகளுக்கான கட்டணமாக, ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாயை அரசே ஏற்றுக் கொண்ட நிலையில், இதேபோல இழப்பீடு வழங்கி, தனியார் பேருந்துகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை அரசு ஏற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் முதல்வரின் அறிவிப்பு அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் தொடர்பாக எந்த அரசாணையும் பிறப்பிக்கப்படவில்லை என்பதால், இந்த திட்டத்தை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும்” என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு
இருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “வெற்றி பயணத் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த தடை விதிக்க முடியாது. ஒரு மாவட்டத்தில் செயல்படும் தனியார் போக்குவரத்து சங்கம் எந்த அடிப்படையில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்ட திட்டத்திற்கு தடை கோர முடியும் என்றனர். இதையடுத்து, மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிபதிகள், மனுவை திரும்பப்பெற மனுதாரரை அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்