Rock Fort Times
Online News

திருச்சியில் நடக்கும் திமுக மாநாடு தமிழ் நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான மாநாடாக இருக்கும்… அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. ஆட்சியை தக்கவைக்க திமுக முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு, இளைஞர் எழுச்சி மாநாடு, மகளிர் அணி மாநாடு ஆகியவற்றை நடத்தி வருகிறது. அந்தவகையில் திருச்சி மாவட்டம், சிறுதனூரில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாட்டை . மார்ச் 9ம் தேதி நடத்த உள்ளது. கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டில் எழுச்சியுரை ஆற்ற உள்ளார். மாநாட்டிற்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த பணிகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது திருச்சி கிழக்கு மாநகர கழக செயலாளர் மு. மதிவாணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாநாட்டுப் பணிகள் கழக முதன்மைச் செயலாளர், அமைச்சர் கே.என். நேரு வழிகாட்டுதலில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநில மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்பாக திருச்சியில் மாநாடு நடத்தினால் அது எப்போதுமே திமுகவுக்கு திருப்புமுனையாக தான் அமையும். மாநாடு சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான புதிய திசையை இந்த மாநாடு நிர்ணயிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்