திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவத்தினர் காலனி அருகேயுள்ள விவேகானந்தர் நகர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் முத்துப்பாண்டி (27). திருமணமாகாத இவர் கோவையில் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். அவ்வப்போது திருச்சி வருவார். அப்போது அவரது நண்பரின் மீன் கடை ஒன்றில் வேலை பார்ப்பதும், வேலை முடிந்து நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதும் வழக்கம் என்று கூறப்படுகிறது. அந்தவகையில் சமீபத்தில் திருச்சி வந்த அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் ஸ்டான்லி என்கிற பாபா என்பவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். மேலும், இருவரும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், முத்துப்பாண்டி தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து சென்ற ஸ்டான்லி, மஞ்சத்திடல் ரயில் நிலையம் அருகே முத்துப்பாண்டியை வழிமறித்து அவரிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது ஆத்திரமடைந்த ஸ்டான்லி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முத்துப்பாண்டியை கழுத்து பகுதியில் குத்தியுள்ளார். இதனால், ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அவரின் கழுத்தை ஸ்டான்லி அறுத்துள்ளார். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
அங்கிருந்து தப்பியோடிய ஸ்டான்லியை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், இதுகுறித்து பொன்மலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முத்துப் பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஸ்டான்லியை கைது செய்தனர். மது மற்றும் கஞ்சா போதையில் நண்பனையே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.