பெரம்பலூரில் பயங்கர விபத்து: விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பஸ் மோதல் : 3 பேர் பலி
திண்டுக்கல்லை சேர்ந்த நாகசாமி என்பவர் தனது உறவினர்களுடன் திருவண்ணாமலைக்கு ஒரு வேனில் சென்று விட்டு அங்கிருந்து ஊர் திரும்பி கொண்டு இருந்தார். இன்று ( 05.06.2023 ) அதிகாலை 2.30 மணியளவில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்துகொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற டிராக்டரை முந்த முயற்சி செய்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியன் மீது மோதியது. இந்த விபத்தில் டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் , டிராக்டரை ஓட்டி வந்த சாமிதாஸ் என்பவரும். அவருடன் சென்ற சேகரும் படுகாயம் அடைந்தனர். வேனில் வந்தவர்களும் காயம் அடைந்தனர். இது குறித்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது. அதில், காயம் அடைந்தவர்களை ஏற்றிக்கொண்டு இருந்தபோது அவ்வழியாக வந்த தனியார் ஆம்னி சொகுசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஆம்புலன்ஸ் மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில் குப்புசாமி மற்றும் அவரது பேத்தி கவிப்ரியா, 108 ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடைபெற்ற இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.