தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை: முன்கூட்டியே விற்றுத் தீர்ந்த மது வகைகள்…!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்.23) நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு நேற்று 21ம் தேதி முதல் நாளை 23ம் தேதி வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மதுக்கடைகள், பார்கள், தனியார் ஹோட்டல்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பயன்பாட்டிலுள்ள அனைத்து இடங்களிலும் மதுபானங்கள் அல்லது போதைப்பொருட்கள் விற்பனை, வழங்கல் மற்றும் பயன்படுத்த அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் அமைதியாகவும், ஒழுங்காகவும் நடைபெற வேண்டும் என்பதற்காக இந்த நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் முன்கூட்டியே போட்டி போட்டுக் கொண்டு தங்களுக்கு விருப்பமான மது வகைகளை வாங்கி சென்றனர். அந்தவகையில் நேற்று முன்தினமே மதுப்பிரியர்கள் 3 நாட்களுக்கும் சேர்த்து மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். இதனால் நேற்று முன்தினம் மட்டும் ரூ.400 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ரூ.320 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக ரூ.80 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. தினமும் ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறும் நிலையில் ஒரே நாளில் மட்டும் ரூ.400 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.