Rock Fort Times
Online News

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சனைக்கு மூல காரணமே டாஸ்மாக் கடைகள் தான்- திருச்சியில் திமுக அரசை விளாசிய ஜி.கே.வாசன்…!

திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, கரூர் உள்பட டெல்டா மண்டலங்களுக்கு உட்பட்ட 19 மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள பி.எல்.ஏ ஹோட்டலில் இன்று(02-01-2025) நடந்தது. இதில், கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினார் . மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ் மூப்பனார், தர்மராஜ், திருச்சி மாவட்ட தலைவர்கள் இன்டர்நெட் ரவி, குணா, கே.வி.ஜி. ரவீந்திரன், சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநில செயலாளர்கள் ராஜு, மதிவாணன், மாநில சிறப்பு அழைப்பாளர் அன்னபூரணி, விவசாய பிரிவு மாவட்ட தலைவர் புங்கனூர் செல்வம், மாவட்ட செயலாளர் சரவணன், மாநில மாணவர் அணி செயலாளர் லோகேஷ், மாநில இளைஞரணி செயலாளர் சிவகணேசன் மற்றும் 19 மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்றத்தில் த.மா.காவின் குரல் பலமாக ஒலிக்கும் நோக்கில் இன்று உறுப்பினர் அட்டை வழங்குவதன் மூலமாக தொடங்கி வைத்துள்ளோம். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் வாய் மூடி மௌனமாக இருப்பது வெட்கக்கேடானது. என் கட்சியில் ஒருவர் தவறு செய்தாலும் நான் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன். பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணியில் ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. “ஒத்த கருத்து” என்பது தேர்தலில் பெறுவது, போட்டியிட்டு வெற்றி பெறுவது தான். திமுக அரசின் அவலங்களை கண்டித்து ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இன்று காலை கூட பசுமைத் தாயகம் தலைவர் செளமியா அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் எதிர்க்கட்சிகள் குரலை ஒருபோதும் முடக்கிவிட முடியாது. தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு மிக முக்கிய காரணம் மதுபான கடைகள் தான். மதுபான கடைகளை ஆட்சிக்கு வந்தால் மூடுவோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, அதை செய்யாமல் தவிர்ப்பது கண்டிக்கத்தக்கது. தற்போது மனமகிழ் மன்றங்கள் மதுபானக் கூடங்களாக மாற்றப்படுவதை நிறுத்த வேண்டும். அண்ணா பல்கலை கழக மாணவி விவகாரத்தை அரசுக்கு நினைவுபடுத்த வேண்டியது எதிர்கட்சிகளின் கடமை. அரசு உண்மை நிலையை வெளிக்கொண்டுவர வேண்டும். குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும். புயல், கன மழையால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு. அரசு இழப்பீட்டை இன்னும் வழங்கவில்லை. ஏக்கர் ஒன்றுக்கு நெற்பயிருக்கு 35,000 ரூபாய், தோட்டப்பயிர்களுக்கு 25,000 ரூபாய் வழங்க வேண்டும். பயிர்க்காப்பீட்டுக்கு அரசு வழங்கும் மானியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு முழுமையான நிதியை ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்