தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை மற்றும் அதன் தொடர்ச்சியாக வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் அதீத கனமழை பெய்து பெருவெள்ளம் சூழ்ந்தது. இந்த புயல், மழை, வெள்ள பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து வெள்ள பாதிப்பு நிவாரணப்பணிக்கான தொகை ஒதுக்கீடு செய்வது பற்றி வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்திருந்தார். அப்போது மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கடந்த 47 ஆண்டுகளாக இல்லாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பையும், தென் மாவட்டங்களில் தற்போது வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு,தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் இன்று ( 22.12.2023 ) செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது” என கூறினார். தேசிய பேரிடராக அறிவிப்பதற்கு சில வழிமுறைகள் உள்ள நிலையில், இதுவரை எந்த மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவித்தது இல்லை எனவும் அவர் கூறினார். “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களில் டிசம்பர் 21 ஆம் தேதி வரை 42,290 பேர் மீட்கப்பட்டுள்ளனர்” எனவும் கூறினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.