தமிழ்நாட்டில் விஜய்க்கு போதிய பாதுகாப்பு தருவதில்லை… த.வெ.க. நிர்வாகி கு.ப.கிருஷ்ணன் குற்றச்சாட்டு…!
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பாசறை கூட்டம் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் த.வெ.க. தேர்தல் கண்காணிப்பாளர் கு.ப.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர். கூட்டத்தில் தமிழக சட்டமன்ற தேர்தலை எவ்வாறு சந்திப்பது என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கு.ப.கிருஷ்ணன் கூறுகையில், மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், திமுகவில் இணைந்தது அவருடை விருப்பம். கரூர் விவகாரத்தில் மத்திய அரசை விமர்சனம் செய்தது என்னுடைய சொந்த கருத்து. எங்கள் கட்சி தலைவரின் கருத்து அல்ல. அதுவும் நான் மத்திய அரசை விமர்சிக்கவில்லை.சி.பி.ஐ.யை தான் விமர்சனம் செய்தேன். விஜயை கரூரில் விசாரிக்காமல் டெல்லியில் விசாரித்தது தவறு என்று தான் கூறியுள்ளேன். தமிழ்நாட்டில் விஜய்க்கு போதிய பாதுகாப்பு தருவதில்லை. த.வெ.கவில் வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியாத அளவிற்கு விருப்ப மனுக்கள் குவிந்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்திக்க விஜய்க்கு தமிழ்நாடு அரசு பாதுகாப்பு தரும் என கூறினால் இப்போதே மக்களை சந்திக்க நாங்கள் தயார். நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும். த.வெ.க. தொண்டர்கள் வெள்ளம் போன்றவர்கள், எங்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்க முடியாது. இலவச திட்டங்கள் கொடுப்பதை நாங்கள் வரவேற்கிறோம். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். ஆனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பது ஏமாற்று வேலை. த.வெ.க.மீது உள்ள பயத்தின் காரணமாக தி.மு.க., அதிமுக இரண்டு கட்சிகளும் இலவசங்களை அறிவித்து உள்ளன. திமுக அரசு தொடங்கிய மகளிர் உரிமை தொகையை நாங்கள் தொடர வேண்டும் என அவசியமில்லை. நாங்கள் பொருளாதாரத்தை சமன் செய்யும் வகையில் புதிய திட்டத்தை கொண்டு வருவோம். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பது தான் விஜய்யின் லட்சியம். அதை நாங்கள் செய்வோம். 234 தொகுதிகளிலும் த.வெ.க வேட்பாளர் விஜய் தான். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.