டெல்லி பயணத்தை முடித்த முதல்வர் விஜய்; எதிர்பார்க்கப்பட்ட ராகுல் காந்தி சந்திப்பு நடைபெறாததால் காங்கிரசார் அதிர்ச்சி..!
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று (27.05.2026) டெல்லி சென்றார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி சென்ற அவருக்கு, தமிழ்நாடு இல்லத்தில் தலைமைச் செயலாளர் மு.சாய்குமார், தமிழ்நாடு இல்லத்தின் தலைமை உள்ளுறை ஆணையரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான ஆர்.ஜெயா உள்ளிட்ட அதிகாரிகள் மலர்க்கொத்து வழங்கி வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ அலுவலகமான சேவா தீர்த்தத்தில் அவரை முதலமைச்சர் விஜய் சந்தித்து பேசினார். அப்போது வந்தே மாதரம் பாடல் விவகாரம், தமிழ்நாட்டில் வான்வழி அமைப்பு மையம் அமைக்கும் திட்டம் (AMCA – CABS தொடர்பான DRDO ஆராய்ச்சி), மேகதாது பிரச்சினை மற்றும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் வழங்கப்பட்டன. பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், இரயில்வே திட்டங்கள் மற்றும் தொழில் வழித்தடங்களுக்கு முன்னுரிமை அளித்து கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்நிலையில், இரண்டு நாள் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி தமிழ்நாடு இல்லத்திலிருந்து முதலமைச்சர் விஜய் இன்று(28.05.2026) சென்னை புறப்பட்டார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த சந்திப்பு நடைபெறாமலேயே அவர் சென்னை திரும்பியது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Comments are closed.