டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் விஜய் இன்று(01-09-2026) தண்ணீர் திறந்து வைத்தார். இதற்காக அவர் இன்று காலை தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் சென்றார். அவருக்கு வழி நெடுகிலும் சாலையின் இருபுறமும் காத்திருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மேட்டூரில் இருந்து சென்னை திரும்பும்போது விவசாயி ஒருவரின் வீட்டிற்கு முதலமைச்சர் விஜய் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார். சேலம் மாவட்டம், சின்னக்காவூரில் உள்ள விவசாயி வீட்டிற்கு நேரில் சென்ற முதலமைச்சரை, அங்கிருந்த மூதாட்டி அவரின் கையை பிடித்து அழைத்து சென்றார். அப்போது முதலமைச்சர் விஜய், வேளாண் பணிகள் குறித்து விவசாயியிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து சின்னக்காவூர் பகுதி விவசாயிகளின் கோரிக்கைகளையும் அவர் கேட்டறிந்தார். மேலும், மூதாட்டி ஒருவருக்கு கருப்பு நிற கண் கண்ணாடியையும் அணிவித்து, அங்குள்ள பெண்கள் அனைவருக்கும் புடவைகளை பரிசளித்தார். முதலமைச்சரின் இந்த திடீர் விசிட் அப்பகுதி மக்களை பெரும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Comments are closed.