Rock Fort Times
Online News

மணப்பாறை முறுக்கிற்கென தனி தொழில் தொகுப்பு… * சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ. கதிரவன் கோரிக்கை..!

மணப்பாறை என்றவுடன் முறுக்கும், மாட்டுச்சந்தையும் தான் சட்டென நம் அனைவரின் நினைவுக்கும் வரும். அந்தவகையில் இங்கு சிறுசிறு குடிசை தொழிலாக முறுக்கு தயாரித்தலை தொழிலாக செய்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் முதன்முறையாக 2023ல் மணப்பாறை முறுக்கு புவிசார் குறியீடு அந்தஸ்தை பெற்றது. இந்நிலையில் இங்கு முறுக்கு தயாரிக்கும் தொழில் செய்பவர்களின் தரம் மேம்படுவதற்கும், உலகலாவிய சந்தைப்படுத்துதலுக்கும் உதவிடும் வகையில் மணப்பாறைக்கென தனி இன்டஸ்ட்ரியல் க்ளஸ்டர் அமைக்க வேண்டுமென சட்டசபையில் இத்தொகுதியின் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்தார். ஏற்கெனவே தமிழகத்தில் திருப்பூரில் செயல்படும் ஆடை ஏற்றுமதி தொழில் செய்பவர்கள் சிவகாசியில் பட்டாசு தயாரிக்கும் தொழில்முனைவோர்கள், அம்பத்தூர் மற்றும் ஈரோட்டில் பொறியியல்
மற்றும் ஜவுளித்தொழில் செய்பவர்களுக்கென தனித்தொழில் தொகுப்பு அரசால் செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. அந்தவகையில் மணப்பாறைக்கென தனித்தொழில் தொகுப்பு கொண்டு வரப்பட்டால் தனி நிறுவனத்தால் வாங்க முடியாத கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நவீன இயந்திரங்கள் தொழில் உட்கட்டமைப்புகள் ஆகியவற்றை அரசு மானியத்துடன் பொது நிதியில் செயல்பாட்டிற்கு கொண்டுவர முடியும். பலர் ஒன்று சேர்ந்து மூலப்பொருட்களை ஒன்றாக வாங்க முடியும்.
தயாரிக்கும் பொருட்களை ஒரே பிராண்டின்கீழ் உலக அளவில் சந்தைப்படுத்த முடியும். எம்.எல்.ஏ கதிரவனின் இன்டஸ்ட்ரியல் க்ளஸ்டர் கோரிக்கை செயல்படுத்தப்பட்டால் அதிகபடியான கிராமங்களை உள்ளடக்கிய மணப்பாறை தொகுதியில் முறுக்கு உற்பத்தி செய்பவர்களின் தொழில் மேம்படுவதுடன் வாழ்க்கைத் தரமும் உயரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்