கல்லூரி கட்டணம் செலுத்தாத மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி மறுப்பு…
கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து திருச்சியில் மாணவர்கள் சாலை மறியல்..
திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூரில் ஆக்ஸ்போர்ட் இன்ஜினியரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில், 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். செமஸ்டர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தேர்வு கட்டணம், விடுதி கட்டணம், ஆண்டு கல்வி கட்டணத்தை கட்டாத மாணவர்களை செமஸ்டர் தேர்வு எழுத கல்லூரி நிர்வாகத்தினர் ஹால் டிக்கெட் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென கல்லூரி வாசல் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் செமஸ்டர் தேர்வு எழுத அனுமதி மறுக்கும் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். மாணவர்களின் போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் போலீஸ் உதவி கமிஷனர் கென்னடி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவர்களின் போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.