தமிழக சிறைகளில் பாதுகாப்பை பலப்படுத்த அதிரடி நடவடிக்கை… 3 பேர் கொண்ட உயர்நிலைக் குழு அமைத்து முதல்வர் விஜய் உத்தரவு..!
தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து, பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பிக்க உயர்மட்டக் குழு அமைக்க முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டச் சிறையில் இருந்து கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக சிறைச்சாலைகளில் நிலவும் பாதுகாப்பு நிலவரம் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் அடிப்படையில், சிறைகளில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குனர் ஜே.கே.திரிபாதி தலைவராகவும், கூடுதல் காவல்துறை தலைவர் /சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் தலைமை இயக்குனர் சங்கர் மற்றும் சிறைத் துறையின் முன்னாள் துணைத் தலைவர் ராஜேந்திரன் (ஓய்வு) ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள்.
தமிழகத்தில் உள்ள சிறைகளின் தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு நடைமுறைகள், கண்காணிப்புக் கட்டமைப்புகள், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்புப் பணியில் போதிய எண்ணிக்கையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து இக்குழு விரிவாக ஆய்வு செய்யும். மேலும், நாட்டின் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் சிறை பாதுகாப்புக்காகப் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளையும் ஆய்வு செய்து, தமிழகச் சிறைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான விரிவான பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது. இந்த அறிக்கையை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சிறைச்சாலைகளின் பாதுகாப்பை போர்க்கால அடிப்படையில் வலுப்படுத்த வேண்டும் என்றும், பணியில் கவனக்குறைவாகச் செயல்படும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Comments are closed.