மூன்று நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி சென்னையில் நேற்று “கேலோ இந்தியா” விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்தார். இன்று(20-01-2024) தனி விமானம் மூலம் திருச்சி வந்த அவர் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக, குண்டு துளைக்காத காரில் வந்த மோடி கோட்-சூட் அணிந்து கதவைத் திறந்து காரில் நின்றபடி பொதுமக்களை பார்த்து கையசைத்தார். பின்னர், கோவிலுக்குள் சென்றவுடன் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை மற்றும் அங்க வஸ்திரம் அணிந்து கொண்டார். பின்னர் அவர் , பெருமாளை பயபக்தியுடன் தரிசனம் செய்தார். மேலும், கருடாழ்வார் சன்னதி உட்பட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டார். அப்போது கோவில் யானை ஆண்டாளிடம் ஆசி பெற்றார். அப்போது யானை மவுத் ஆர்கன் வாசிக்க, பிரதமர் மோடி அதை ரசித்து கேட்டதோடு மகிழ்ச்சியில் யானையை பாசத்துடன் தட்டிக் கொடுத்தார்.
தொடர்ந்து அவர், கம்ப ராமாயண பாராயணத்தை ரசித்து கேட்டார். முன்னதாக பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளித்து அர்ச்சகர்கள் மற்றும் கோவில் அதிகாரிகள் வரவேற்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.