Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்ப திருவிழா: முகூர்த்தக்கால் நடப்பட்டது…!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர். இங்கு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.
அதேபோல, இந்த கோவிலில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிறப்பு வாய்ந்ததாகும். அந்தவகையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத் திருவிழா நாளை(12-02-2024) தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. தெப்பத்திருவிழாவையொட்டி இன்று காலை 10 மணியளவில் மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடப்பட்டது முன்னதாக, முகூர்த்தகாலின் நுனியில் சந்தனம், மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு மந்திரங்கள் ஓதி புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் முகூர்த்தகாலை கோவில் இணைஆணையர் மாரியப்பன், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நட்டனர்.

தெப்பத்திருவிழாவின் முதல் நாளான நாளை மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்திலும், 13-ந்தேதி மாலை ஹனுமந்த வாகனத்திலும், 14-ந்தேதி கற்பகவிருட்ச வாகனத்திலும், 15-ந்தேதி வெள்ளி கருட வாகனத்திலும், 16-ந்தேதி இரட்டை பிரபை வாகனத்திலும், 17-ந்தேதி யானை வாகனத்திலும் உள்திருவீதிகளில் சுவாமி வலம் வருகிறார். தெப்பத்திருவிழாவின் 7ம்நாளான 18-ந்தேதி மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நெல்லளவு கண்டருளி உள்வீதிகளில் வலம் வந்து மூலஸ்தானம் சேருகிறார். முக்கிய திருநாளான தெப்பத்திருவிழா 8ம்நாளான 19-ந்தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 3 மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார்.
9ம்திருநாளான 20-ந்தேதி காலை 7மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 2 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 3 மணி முதல் மாலை 5 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

யார் இந்த தேவதை ! ரசிகரின் குழந்தைக்கு பெயர் வைத்த சிவகார்த்திகேயன்..

1 of 841

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்