திருச்சி கேம்பியன் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா: போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு…!
திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இடையேயான விளையாட்டு விழா ஆகஸ்ட் 24ம் தேதி நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் அருட்சகோதரர் ஜேம்ஸ் பால்ராஜ் முன்னிலை வகித்தார். திருச்சி ராணா மற்றும் மாருதி மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ ஆலோசகர் டாக்டர் லட்சுமி பிரபா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் கமலா, கௌரவ விருந்தினராக பங்கேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக அமலி சேவா இல்லத்தின் தலைமை அருட்சகோதரி ரஞ்சிதம், பள்ளியின் ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர் ரெக்ஸ் ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மழலைச் செல்வங்கள் பங்கு பெற்ற வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளும், மாணவ- மாணவிகளின் தனிநபர் திறன் குழு ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. அணிவகுப்பிற்கான முதல் பரிசை லயோலா அணியும், இரண்டாவது பரிசை மாண்போர்ட் அணியும் தட்டிச் சென்றன.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு தலைமை விருந்தினரும், கவுரவ விருந்தினரும் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கி பாராட்டினர். அப்போது கௌரவ விருந்தினர் டாக்டர் கமலா பேசுகையில், சின்னஞ்சிறு குழந்தைகள் அனைவரும் தலைமைத்துவ பண்புகளை வெளிக்கொண்டு வந்திருப்பது பார்ப்பதற்கு வியப்பாக உள்ளது. தங்கள் மகனும் பள்ளியின் முன்னாள் மாணவன் என்பதை பெருமைப்பட கூறினார். சிறப்பு விருந்தினர் டாக்டர் லட்சுமி பிரபா பேசுகையில், எங்கள் குடும்பத்திற்கு கேம்பியன் பள்ளியு டனான உறவு ஆழமானது. தங்களுடைய இரண்டு பிள்ளைகளும் சதுரங்க விளையாட்டில் சாதிப்பதற்கும், வாழ்க்கையில் சாதிப்பதற்கும் கேம்பியன் பள்ளி ஆசிரியர்கள் முதுகெலும்பாக விளங்கி இருக்கிறார்கள் என்றார். மேலும் மாணவர்கள் ஒழுக்கம், நேர்மை போன்ற உயரிய பண்புகளோடு விளங்கினால் வாழ்வில் உயரலாம் என்று கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் ஜேம்ஸ் பால்ராஜ், துணை முதல்வர் அருட்சகோதரர் பன்னீர்செல்வம், தொடக்கப்பள்ளி பொறுப்பாளர் அருட்சகோதரர் ராஜா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Comments are closed.