திருச்சி மாவட்டத்தில் பறக்கும் படையினர் மேற்கொண்டு வரும் வாகன சோதனையில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட
ரூ.1 கோடியே 37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மா.பிரதீப்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு பறக்கும்படையினர் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் இதுவரை மாவட்டம் முழுவதும், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 37 லட்சம் பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்ட வகையில் ரூ.27 லட்சம் உரியவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. ரொக்கம் அல்லது நகைகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த 24 மணி நேரத்துக்குப்பின் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால், மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும். அல்லது தேர்தல் முடிந்தபின்னர் (40 நாட்களுக்குப் பிறகு ) ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
மண்ணச்சநல்லூர் பகுதியில் கைப்பற்றப்பட்ட ரூ.35 லட்சம் வங்கி பணம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அதற்குரிய ஆவணங்களை அவர்கள் தாக்கல் செய்யாததால் பணம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் இதுவரை, தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் தொடர்பாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. மாவட்டத்தில், 24,000 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் தபால் மூலம் ஓட்டுப்போடுவதற்கான படிவம் 12டி வழங்கப்பட்டுள்ளது. இதில், மாற்றுத்திறனாளிகள் 619 பேர், 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 1000 பேர் என மொத்தம் 1619 பேர் தபால் மூலம் ஓட்டுபோட விருப்பம் தெரிவித்து படிவத்தை பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
1
of 938
Comments are closed, but trackbacks and pingbacks are open.