Rock Fort Times
Online News

கூடுவாஞ்சேரி அருகே நள்ளிரவில் காருடன் கடத்தப்பட்ட 12 வயது சிறுமி சீர்காழியில் மீட்பு…!- தப்பி ஓடிய நபருக்கு வலைவீச்சு..!

சிவகங்கை மாவட்டம், கமுதியைச் சேர்ந்த மலையரசன் என்பவர், சென்னை பொத்தேரி பகுதியில் கிளவுட் கிச்சன் நடத்தி வருகிறார். இவர் தனது சொந்த ஊரான கமுதிக்கு சென்றுவிட்டு, நள்ளிரவு 12 மணியளவில் குடும்பத்துடன் மீண்டும் சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது, தனது 12 வயது மகள் ரிஷிகாவை காரில் அமர வைத்துவிட்டு, அவரும் அவரது மனைவியும் கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள கடைக்கு சென்று உணவு சாப்பிட்டுள்ளனர். அந்த நேரத்தில் காரை இயக்கிய நிலையில் விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனை நோட்டமிட்ட மர்மநபர், காரை திருடிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. உணவு சாப்பிட்டுவிட்டுப் பெற்றோர் திரும்பி வந்து பார்த்தபோது, காரையும் அதிலிருந்த சிறுமியையும் காணவில்லை. இதையடுத்து, கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், இரவோடு இரவாக தனிப்படைகள் அமைத்த போலீசார், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதையடுத்து கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், சிறுமியை சீர்காழி அருகே போலீசார் மீட்டுள்ளனர். சிறுமியுடன் காரை கடத்திச் சென்ற நபர் தப்பியோடியுள்ளார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்