திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவுக்கு திருச்சி நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த தொகுதியில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளுக்கு குறைவில்லாமல் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால், வைகோ கோர்ட் உதவியை நாடியுள்ளார். இது தொடர்பாக திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், பம்பரம் சின்னம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். கிடைக்கா விட்டாலும் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.
அதிமுகவின் சின்னமே முடங்கும் நிலை உள்ளது. இன்றைய கால கட்டத்தில் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க 24 மணி நேரம் கூட தேவைப்படாது.
வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை பா.ஜ.கவிற்கு ஆதரவாக இருக்கிறது. தேர்தல் ஆணையம் கேட்ட ஆவணங்கள் கொடுத்து விட்டோம். ஆனால் பம்பரம் சின்னம் ஒதுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணத்தை கூறுகிறார்கள். ம.தி.மு.க, விசிக மட்டுமல்ல நாம் தமிழர் கட்சிக்கும் சின்னம் ஒதுக்கவில்லை. பா.ஜ.க வை எதிர்க்கும் அரசியல் இயக்கங்கள் இருக்க கூடாது என்பதற்காக பா.ஜ.க விற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் விஜயபாஸ்கர் எனக்கு வாழ்த்து கூறுவதை போல் பேசியுள்ளார்.
எதிர்க்கட்சிகளை முடக்க நினைக்கும் பா.ஜ.க விற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
என்னை வெளியூர் வேட்பாளர் என்கிறார்கள். நான் பாகிஸ்தானிலிருந்து வரவில்லை. தமிழ்நாட்டை சேர்ந்தவன் தான். திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மதிமுக துணை பொது செயலாளர் டாக்டர் ரொகையா, மாவட்ட செயலாளர். வெல்லமண்டி சோமு, பூமிநாதன் எம்.எல்.ஏ.ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.