திருச்சியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: கைது செய்யப்பட்ட அரசு டாக்டர் மற்றும் அவரது தாயாரை 20 கி.மீ. சுற்றி போலீசார் அழைத்துச் செல்லப்பட்டதால் சந்தேகம்…!
திருச்சி சிட்டி பகுதியில் தனியார் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்குள்ள சில மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கிரேஸி சகாயராணி என்பவர் இருந்து வருகிறார்.
இவரது மகனான சாம்சன், திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த அன்பில் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார். அவர் அடிக்கடி விடுதிக்கு வந்து மருத்துவம் பார்ப்பது போல மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து 1098 சைல்டு லையனுக்கு தகவல் வந்ததை அடுத்து அவர்கள் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி, விசாரித்த திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலரான விஜயலட்சுமி, இந்த விவகாரம் குறித்து கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சாம்சன் மீது கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு , சாம்சன் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சாம்சனின் தாய் கிரேஸி சகாயராணியையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் பாலக்கரை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தாமல் நீண்ட நேரம் காவல் நிலையத்திலேயே வைத்திருந்ததாக குற்றம் சாட்டிய இந்திய மாணவர் சங்கத்தினர், பாலக்கரை காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் போலீசார் பாதுகாப்புடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, திருச்சி மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவட்சன் இல்லத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்த இரவு 9.40 மணிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை நாளை அழைத்து வர கூறியதை அடுத்து இருவரும் மீண்டும் போலீசார் வாகனத்தில் ஏற்றப்பட்டு காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தான் நீதிபதி இல்லம் அமைந்துள்ளது. அங்கிருந்து காந்தி மார்க்கெட் காவல் நிலையம் 3 கிலோமீட்டர் தூரத்தில் தான் உள்ளது. ஆனால், டாக்டர் மற்றும் அவரது தாயாரை நீதிமன்ற வளாகத்தில் இருந்து டிவிஎஸ் டோல்கேட், பழைய பால்பண்ணை, சஞ்சீவி நகர், காவிரி, கொள்ளிடம் செக்போஸ்ட் வழியாக மீண்டும் மாநகர பகுதியான திருவானைக்காவல், சத்திரம் பேருந்து நிலையம், மரக்கடை என சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்துள்ளனர். 3 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட்டுக்கு 20 கிலோமீட்டர் சுற்றி அழைத்துச் செல்லப்பட்டது ஏன்? என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. குற்றவாளிகளை தப்பிக்க வைக்க ஏதேனும் முயற்சி செய்கிறார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்கிற சந்தேகத்தையும் கிளப்பி உள்ளது. மேலும், மருத்துவ பரிசோதனை அரை மணி நேரத்தில் முடிந்து விடும். ஆனால், 3 மணி நேரத்திற்கு மேலாக அவர்கள் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அதற்கான காரணங்களும் தெரியவில்லை. இந்த விவகாரத்தில் முக்கிய புள்ளிகள் சிலர் சம்பந்தப்பட்டு குற்றவாளிகளை விடுவிக்க கூறியதாகவும் தகவல் வெளியானது. காவல் துறையினரின் இந்த போக்கு மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.