திருச்சி மண்டலத்தில் பள்ளிகளில் கட்டிடம் கட்டவும், பேருந்து வாங்கவும் அரிமா சங்கம் சார்பில் ரூ.95 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது என்று அச்சங்கத்தின் சர்வதேச தலைவர் பட்டிஹில் தெரிவித்தார். இதுகுறித்து திருச்சியில் 05-02-2024 (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
கடந்த 1917ம் ஆண்டு அமெரிக்காவில் மெல்வின் ஜோன்ஸ் தொடங்கிய அரிமா சங்கம் 200 நாடுகளுக்கு மேல் 14 லட்சம் உறுப்பினர்கள் மற்றும் 35 இயக்குனர்களுடன் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறது. அரிமாசங்கம் ஐ.நா.சபை அங்கீகாரத்துடன் பார்வையற்றோர், ஆதரவற்றோர்களுக்கு உதவி செய்தல், ரத்த சுத்திகரிப்பு மையங்கள், இயற்கை பேரிடர் காலங்களில் உதவி வழங்குதல், பள்ளி, கல்லூரிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், கண் சிகிச்சை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. அரிமா சங்கம் 324- எப் திருச்சி- மாவட்டத்தில் உள்ள 262 சங்கங்களில் 11,350 உறுப்பினர்களுடன் உலகளவில் உறுப்பினர் வளர்ச்சியில் முதல் மாவட்டமாக திகழ்கிறது. மற்றவர்களுக்கு உதவுவதில் தமிழக அரிமா சங்கம் முன்னணியில் உள்ளது. கண்புரை, சர்க்கரை நோய், கண்தானம், குழந்தை பருவ புற்றுநோய், ரத்ததானம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். திருச்சி மண்டலத்தில் கரூர் தனியார் பள்ளிக்கு பேருந்து வாங்க ரூ. 22 லட்சம், பொன்னமராவதியில் பள்ளி கட்டிடம் கட்ட ரூ.73 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் ஊக்குவிக்கும் வகையில் 11 பேருக்கு ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் 3 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அரிமா சங்க கூட்டம் நடைபெற்றது. இதில், சிறந்த சேவைகளை பாராட்டி விருதுகள் மற்றும் பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில், அரிமா சங்க சர்வதேச இயக்குனர் மதனகோபால், மாவட்ட ஆளுநர் இமயவரம்பன், திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட அவை செயலாளர் தங்கராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் டாக்டர் வீரபாண்டியன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.