திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 100 ரூபாய் கட்டண ரசீது வழங்கியதில் ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக இந்து சமய அறநிலையத்துறை பெண் ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தினம்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பொது தரிசன வரிசை, 100 ரூபாய் கட்டண வரிசை, முதியோருக்கான வரிசை என மூன்று வகையில் தரிசனம் செய்ய வரிசைகள் உள்ளன. இதில், 100 ரூபாய் கட்டண ரசீது வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் ரூ.25,24,100 முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்திய கோயில் இணை ஆணையர் ராமு, முறைகேட்டில் ஈடுபட்ட மேனகா என்ற ஊழியரை சஸ்பெண்ட் செய்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, கோயில் உள்துறை கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, திருச்செந்தூர் டி.எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அதில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயில், 100 ரூபாய் கட்டண சீட்டு விற்பனை நிலையங்களை ஆய்வு செய்த போது, கம்ப்யூட்டரில் ஐ.டி.எம்.எஸ்., பயனர், ஒருமுறை மட்டும் கட்டண சீட்டு நகல் எடுக்கும் வசதி ஆகியவற்றை தவறாக பயன்படுத்தி, முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் ஆய்வு செய்ததில், கோயில் பணியாளர் மேனகா, பணியில் இருந்த நேரத்தில் மட்டும் கட்டண சீட்டுகள் மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது. அவர், ரூ.25,24,100 முறைகேடாக கையாடல் செய்துள்ளார். தினசரி கட்டண சீட்டு மூலம் பெறப்படும் அறிக்கைகளை, கம்ப்யூட்டர் வழியாக ஆய்வு செய்யாமலும், கம்ப்யூட்டரில் அச்சிடப்பட்ட கட்டண சீட்டுகளை ஒப்பிட்டு சரி பார்க்காமலும் இருந்ததால், கோயில் பணியாளர்கள் பாலமுருகன் மற்றும் உச்சிமாகாளி ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட மேனகா தவறை ஒப்புக் கொண்டு, இழப்பு தொகையில், 5 லட்சம் ரூபாயை தானாக முன்வந்து செலுத்தியுள்ளார். மீதி தொகையை திருப்பி செலுத்துவதாக அவர் கடிதம் மூலம் குறிப்பிட்டுள்ளார். கோயிலுக்கு நிதி இழப்பு ஏற்படுத்திய வகையிலும், கோயிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்திய வகையிலும், மேனகா மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

Comments are closed.