சேலம் மாவட்டம், ஆண்டிக்கரையைச் சேர்ந்தவர் வல்லரசு (26), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஸ்ரீபிரியா(22). கரும்புச்சாறு விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு மைவிழி (4), தர்ஷன் (2) என்ற இரு குழந்தைகள். ஸ்ரீபிரியாவுக்கும், அவரது மாமியாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதால் ஸ்ரீபிரியா மேட்டூர் ராஜகணபதி நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவியை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல நேற்று வல்லரசு தனது மாமியார் வீட்டிற்கு சென்றார். அன்று இரவு வல்லரசு தனது இரு குழந்தைகளுடன் தனி அறையில் தூங்க சென்றார். இன்று(ஜூலை 14) காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அவரது மனைவி மற்றும் ஸ்ரீபிரியாவின் தாயார் வெண்ணிலா ஆகியோர் கதவை பலமாக தட்டிப் பார்த்தனர். அப்போதும் கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது இரண்டு குழந்தைகளும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர். வல்லரசு தனது மனைவியின் சேலையில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். மூன்று சடலங்களையும் மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வல்லரசு தனது குழந்தைகளைக் கொலை செய்து, பின்னர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பொறுப்பு இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed.