ஆட்சியை கவிழ்க்க தவெக எம்.எல்.ஏ. விடம் பேரம் பேசிய வழக்கை கையில் எடுத்தது அமலாக்கத்துறை…* சிங்கப்பூர் தொழிலதிபருக்கு ‘செக்’
முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசை கவிழ்ப்பதற்கு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம், ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக இளையராஜா கொடுத்த புகாரின்பேரில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிங்கப்பூரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் அடிக்கடி செல்போனில் பேசியதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் சட்டவிரோத ஹவாலா பண பரிமாற்றமும் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த சிங்கப்பூர் தொழில் அதிபர் யார் என்று தெரியவந்துள்ளது. அவரது பெயர் லட்சுமண பெருமாள். சிங்கப்பூரில் நீண்ட காலமாக வசித்து வரும் இவர், சென்னையில் உள்ள அரசியல் பிரமுகர்கள் பலருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். இந்த தொடர்பின் மூலமாகவே குறிப்பிட்ட அரசியல் கட்சியை சேர்ந்த சிலர், லட்சுமண பெருமாளை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அவர்களது ஆலோசனையின் பேரிலேயே த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை இழுப்பதற்காக சிங்கப்பூரில் இருந்தபடியே லட்சுமண பெருமாள் சென்னையை சேர்ந்த நபர்களோடு போனில் பேசி இருக்கிறார். இவர் சென்னையில் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு பினாமியாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அவர் வழக்கு தொடர்பாக முக்கியமான ஆதாரங்களை அழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த சிங்கப்பூர் தொழில் அதிபரை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவரை பற்றி ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் கொடுத்து, விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
இது ஒருபுறம் இருக்க இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும், அவரது தம்பி அசோக்குமாருக்கும் சென்னை ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியுள்ளது. அவர்கள் இருவரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் காலையும், மாலையும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் செந்தில்பாலாஜியும், அவரது தம்பியும் இன்று வரை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில், தவெக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிய வழக்கில் ஹவாலா பணம் கைமாறி இருப்பதாகக் காவல்துறை தெரிவித்ததைத் தொடர்ந்து, இவ்வழக்கை அமலாக்கத்துறை தாமாக முன்வந்து விசாரணையைக் கையில் எடுத்துள்ளது. இந்த வழக்கில் கணக்கில் காட்டப்படாத ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்தும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளது.
தவெக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிய வழக்கு விசாரணையை அமலாக்கத்துறை கையில் எடுத்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.