திருச்சியில் உள்ள பிரபல வங்கி ஏடிஎம்-ல் கொள்ளை முயற்சி: நள்ளிரவில் பணம் எடுக்க வந்த வாலிபரை கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையன் தப்பி ஓட்டம்…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி தில்லை நகர் பகுதியில் எஸ்பிஐ ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் ஜாவித் அகமது (30) என்ற வாலிபர் அந்த ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது சுமார் 20 வயது மதிக்கத்தக்க முகமூடி அணிந்த ஒல்லியான தேகம் கொண்ட வாலிபர் ஒருவர், ஏடிஎம்மை உடைக்க முயற்சித்துள்ளார். இதனை கண்ட ஜாவித் அகமது, அந்த வாலிபரை பிடிக்க முயன்றார். அப்போது அந்த முகமூடி அணிந்த வாலிபர் தனது இடுப்பில் சொறுகி இருந்த கத்தியை எடுத்து காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். இச்சம்பவம் குறித்து ஜாவித் அகமது கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தில்லைநகர் போலீசார்,சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணையை துவங்கி உள்ளனர். திருச்சி தில்லை நகர் பகுதி ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். இதனால், எந்நேரமும் ஆள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு இருந்தும் ஏடிஎம் ஐ உடைத்து கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஏடிஎம் அருகில் தான் திருச்சி மாநகராட்சி ஆணையர் இல்லம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.