திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பண்ணாங்கொம்பு மேற்கு களத்தைச் சேர்ந்த நாதன் மகன் ஜெகநாதன்(48). லாரி உரிமையாளரான இவர், மணப்பாறை பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திலிருந்து லாரியில் பால் ஏற்றிக்கொண்டு இரவு மேட்டுக்கடை பால் குளிரூட்டும் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். மணப்பட்டி பிரிவு அருகே லாரி வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி சாலையை கடக்க முயன்றனர். அவர்கள் மீது மோதாமல் இருக்க ஜெகநாதன் லாரியை திருப்பி உள்ளார். அப்போது மருங்காபுரியிலிருந்து வேடசந்தூருக்கு பால் ஏற்றி சென்ற மினி சரக்கு வேனும், லாரியும் மோதிக் கொண்டன. இதில், ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மினி சரக்கு வேன் ஓட்டுநர் யாகபுரத்தை சேர்ந்த பழனிசாமி மகன் பாண்டியன் (20), அவருடன் வந்த இளைஞர் ஒருவர் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெகநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.