தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம், திருச்சிராப்பள்ளி
மண்டலம் சார்பில் விழிப்புணர்வு பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இன்று (30-01-2025) மத்திய பேருந்து நிலையம் அருகே விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் நடராஜன் (திருச்சி மேற்கு), சுரேஷ் பாபு (ஸ்ரீரங்கம்) ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் ஆ. முத்துகிருஷ்ணன், துணை மேலாளர்கள் சுரேஷ் குமார்( வணிகம்) , சாமிநாதன்( தொழில்நுட்பம் )ரவி (பணியாளர் மற்றும் சட்டம் ) ராஜேந்திரன்(திருச்சி )மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உடன் இருந்தனர். பின்னர், மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். அதோடு பேருந்து முகப்பு விளக்குகளின் நடுவில் கருப்பு ஸ்டிக்கர்களை ஒட்டினர். வாகன ஓட்டுநர்கள் சாலையின் இடதுபுறத்திலேயே வாகனங்களை இயக்க வேண்டும். முன் செல்லும் வாகனத்தை ஓட்டுனர்கள் முந்தி செல்வதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். வாகன ஓட்டுநர் குறுக்கு சாலை அல்லது பாதசாரிகள் கடக்கும் இடங்களில் வேகத்தை குறைத்துச் செல்ல வேண்டும். வழித்தடம் மாறும் போது முறையான செய்கையை காட்டி வாகனத்தை செலுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் மஞ்சள் கோட்டினை தாண்டி செல்லக்கூடாது. பயணிகள் ஓடும் பேருந்தில் ஏறவோ, இறங்கவோ கூடாது. படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் .படிக்கட்டில் இருந்து செல்போன் பேசக்கூடாது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Comments are closed.