வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்) நடவடிக்கையைத் தொடர்ந்து, தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் (எஸ்.எஸ்.ஆர்) தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி நவம்பர் 12ம் தேதிக்குள் வாக்குப்பதிவு மையங்களை சீரமைக்கும் பணி நடைபெற இருக்கிறது. நவம்பர் 12ம் தேதி முதல் டிசம்பர் 11ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தங்களுக்கு வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், விண்ணப்பித்தவர்களின் தகுதியானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து 2027 ஜனவரி 4ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று (23-10-2026) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தவெக, திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், நாதக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஆனால் கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் நடந்த முறைகேடுக்கு பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தவெக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மொத்தமாக தவெக கூட்டணி மற்றும் ஆதரவு கட்சிகள், திமுக மற்றும் அதன் கூட்டணிகள், நாதக என 9 கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளனர். இறுதியாக அதிமுக, பா.ஜ.க, தேசிய மக்கள் கட்சி மட்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்றன.

Comments are closed.