“நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி” மருத்துவப் படிப்புகளுக்கான தகுதி மதிப்பெண்களை குறைக்க வேண்டும்…* மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை..!
நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான தகுதி மதிப்பெண்களை குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை மேற்கோள்காட்டி முந்தைய ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியமாகக் குறைக்க வேண்டும் என தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “மத்திய அரசின் சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகம் தகுதிப் புள்ளிக்கான சதவீத வரம்பைக் குறைக்காததால், நாடு முழுவதும் சுமார் 1,857 ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு இடங்கள் காலியாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதில் தமிழ்நாட்டில் பணியில் உள்ள மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 40 இடங்களும் அடங்கும். நேற்று, தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வழக்கில், இந்த சதவீத வரம்பைக் குறைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, முந்தைய ஆண்டுகளைப் போலவே, இதற்கான வரம்பை ‘பூஜ்ஜிய சதவீதத்திற்கு’ குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மருத்துவ இடங்கள் காலியாக இருக்கும்போது, மாநிலங்கள் தங்கள் பணியில் உள்ள மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டிற்குத் தகுந்தவாறு சதவீத வரம்பைத் தாங்களாகவே குறைத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். பொது சுகாதாரம் என்பது மாநிலங்களின் அரசியலமைப்புச் சார்ந்த பொறுப்பாகும். நமது மக்களுக்குக் கூடுதல் சிறப்பு மருத்துவர்கள் தேவைப்படும் சூழலில், நாட்டின் மதிப்புமிக்க சொத்தான மருத்துவ இடங்கள் எதுவும் வீணாக அனுமதிக்கப்படக் கூடாது.” என குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.