திருச்சி பழைய பால்பண்ணையைச் சேர்ந்தவர் எம்.சுபாஷ் சந்திரபோஸ். இவர், கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரியமங்கலத்தில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தில் பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். அப்போது, எங்கள் நிறுவனத்தில் நாளொன்றுக்கு ரூ.2,999 க்கு பொருட்கள் வாங்கும் ஒரு வாடிக்கையாளருக்கு 2 கிலோ எடையுள்ள தலா 5 பைகள் வெங்காயம் ரூ.1-க்கு வழங்கப்படும் என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. இதைப் பார்த்த சுபாஷ் சந்திரபோஸ், ரூ. 2,999 க்கு பொருட்கள் வாங்கிக் கொண்டு வெங்காயப் பைகளை கேட்டபோது, ரிலையன்ஸ் நிறுவன ஊழியர்கள் 2 கிலோ எடையுள்ள ஒரு பையை மட்டும் ரூ. 1-க்கு வழங்கியுள்ளனர். இதுகுறித்து கேட்டதற்கு, ஒரு நபர் ஒரு தடவை ரூ. 2,999 க்கு பொருட்கள் வாங்கினால் ஒரு பை தான் வழங்கப்படும். 5 தடவை ரூ.2,999 க்கு பொருட்கள் வாங்கினால்தான் 5 பைகள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதனால், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுபாஷ் சந்திரபோஸ், திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் வழக்கு தொடர்ந்தார். வழக்கு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது. குறைதீர் ஆணையத் தலைவர் ஆர்.காந்தி, உறுப்பினர்கள் சாயீஸ்வரி, ஜெ.எஸ். செந்தில்குமார் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், விளம்பரத்தில் கூறியபடி வெங்காயம் வழங்காத ரிலையன்ஸ் நிறுவனமானது, சேவை குறைபாடு, முறையற்ற வணிகம் மற்றும் தவறான விளம்பரம் செய்ததற்காகவும், நுகர்வோருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காகவும் சுபாஷ் சந்திரபோஸுக்கு மீதமுள்ள தலா 2 கிலோ எடையுள்ள 4 வெங்காய பைகள் மற்றும் வழக்குச் செலவுக்காக ரூ.5,000 இழப்பீடு வழங்க வேண்டும். இதேபோல, விளம்பரத்தைப் பார்த்து ஏமாந்த நுகர்வோர்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 50 ஆயிரம் அபராதத் தொகையை நுகர்வோர் நல நிதி ஆணையத்தின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். இனிமேல் இது போன்ற தவறான விளம்பரங்களை செய்யக்கூடாது என தீர்ப்பளிக்கப்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.