காவல்துறை, போக்குவரத்து துறை ஊழியர்கள் பனிப்போர் முடிவுக்கு வந்தது- காவலரும், நடத்துனரும் கட்டித்தழுவி சமாதானம்…! ( வீடியோ இணைப்பு)
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவிலிலிருந்து தூத்துக்குடிக்கு சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தில், நாங்குநேரி பகுதியில் ஏறிய காவலர் ஆறுமுக பாண்டியனுக்கும், நடத்துநருக்கும் பயணச்சீட்டு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அப்போது பேருந்தில் பயணித்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட, அது காவல்துறைக்கும், போக்குவரத்து துறைக்குமான பிரச்னையாக வெடித்தது. இதுகுறித்து விளக்கமளித்த போக்குவரத்து கழகம், வாரண்ட் இருந்ததால்தான் காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க முடியும் என்றும் இல்லையென்றால் பயணச்சீட்டு வாங்க வேண்டும் என்றும் கூறியது. இதனால், பல இடங்களில், அரசுப்பேருந்து ஓட்டுநர்கள்மீது சீருடை முறையாக அணியவில்லை, சீட் பெல்ட் போடவில்லை என பல காரணங்களைக் கூறி போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து வந்தனர். இதனால், காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்களிடையே பனிப்போர் நிலவி வந்தது. இதில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினர்.
இந்த பிரச்சனைக்கு முடிவு காண உள்துறை செயலாளர் அமுதாவை, போக்குவரத்து துறை செயலாளர் பணிந்திர ரெட்டி இன்று (25- 05- 2024) சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பிரச்சனைக்கு தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சம்பந்தப்பட்ட கண்டக்டரும், போலீஸ்காரரும் வரவழைக்கப்பட்டு சமாதானம் செய்து வைக்கப்பட்டனர் அதன்பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி சமாதானம் ஆகினர். இதன்மூலம் தமிழக காவல்துறை, போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு இடையே நிலவிய பனிப்போர் முடிவுக்கு வந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Comments are closed.