Rock Fort Times
Online News

சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாங்கி குவித்த சொத்துக்கள்- காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு…!

சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே கடந்த மாதம் முகமது கவுஸ் என்பவரை கத்திமுனையில் கடத்தி ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ராஜாசிங், வருமானவரித் துறை அதிகாரிகள் பிரபு, தாமோதரன், பிரதீப் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், சிறப்பு எஸ்.ஐ. ராஜாசிங், வருமானவரித் துறை அதிகாரி தாமோதரன் ஆகிய இருவரையும் திருவல்லிக்கேணி போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, இவர்களுக்கு மூளையாகச் செயல்பட்டது சைதாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. சன்னி லாய்டு என்பது தெரியவந்தது. மேலும், அவர் மட்டும் தனியாக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வழிப்பறி செய்த அதிர்ச்சி தகவலும் வெளியானது. இவர், வழிப்பறி செய்த பணத்தில் ஜாம்பஜார் பகுதியில் அதிநவீன உடற்பயிற்சிக் கூடம் மற்றும் சென்னை ஈசிஆரில் ரிசார்ட் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், சன்னி லாய்டு பூக்கடை காவல் வட்டாரத்தில் பணிபுரிந்தபோது தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டாராம்.

இதேபோல், மேலும் சில வழக்குகளிலும் சிக்கியதால், 3 முறை பணியிடை நீக்கமும் செய்யப்பட்டிருந்தார். சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் ராஜாசிங், சன்னி லாய்டு மற்றும் கைது செய்யப்பட்டுள்ள வருமானவரித் துறை அதிகாரிகள் ஆகியோர் கூட்டணி அமைத்து, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்படும் பணத்தை (ஹவாலா) பறிமுதல் செய்து, அதை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைப்பதாக கூறி அவர்களே பங்கு போட்டுக் கொள்வார்களாம். இதையடுத்து, எஸ்எஸ்ஐ. சன்னி லாய்டுவை விசாரணைக்கு அழைத்தபோது அவர் தலைமறைவானார். எனவே, அவரை திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலத்தில் தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் அங்கு சென்று கைது செய்தனர். அவரை பணியிடை நீக்கம்( சஸ்பெண்ட்) செய்து சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு பிறப்பித்தார். கைது செய்யப்பட்ட சன்னி லாய்டுவை காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்